தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்ட கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.மாநிலத் தலைவர் இன்ஜினியர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் இன்ஜினியர் சதீஷ்குமார்,பொருளாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாநிலத் தலைவர் இன்ஜினியர் சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு பணியில் தமிழக முழுவதும் 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்தியா முழுவதும் 20,000 மேற்பட்ட நிறுவனங்களும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். நாட்டில் வீடு கட்டி வரும் பொது மக்களுக்கு தேவைப்படும் கட்டுமான பொருட்களில் மிகவும் முக்கியத்துவமும், அத்தியாவசியமும் கொண்ட பொருள் உலர் சாம்பல் செங்கல் ஆகும். இச்செங்கலின் ஜிஎஸ்டி ஆரம்ப காலத்தில் 2017 ஆம் ஆண்டில் 5 சதவீதமாக இருந்தது.பிறகு 2021 ஆம் ஆண்டில் 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
தற்போது மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகப்பெரும் வரிச்சுமை குறைந்து இருப்பது பெரும்பாலான மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஆனால் உலர் சாம்பல் செங்கல் விற்பனைக்கான ஜிஎஸ்டி வரி மட்டும் 12 சதவீதத்திலிருந்து குறைக்கப்படாமல் உள்ளது.இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் உள்ளோம்.உலர் சாம்பல் செங்கல் என்பது இந்திய அளவில் ஒரு குடிசைத் தொழில் போன்றுதான் செயல்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்தொழிலை மேற்கொள்ளும் நபர்கள் பெரும் தொழிலதிபர்கள் என்று கருத முடியாது.மாறாக ஒரு சாமானியர்களாகத்தான் தொழில் புரிந்து வருகிறோம்.தற்போது ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக உள்ளதால் உலர் சாம்பல் செங்கல் விலை உயர்த்தப்படும்.இந்தச் சூழலால் விற்பனை குறையும்.உலர் சாம்பல் செங்கற்களை வாங்கும் ஏழை மற்றும் நடுத்தர வீடு கட்டும் வர்க்கத்தினரும் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.எனவே இந்த தொழிலை நம்பி உள்ள குடும்பங்களை காக்கும் விதமாக உலர் சாம்பல் செங்கல் விற்பனைக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்து எங்கள் வாழ்வாதாரத்தினை காக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.