டெல்லி சென்று போராடுவது சம்பந்தமாக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகளின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.
இந்த பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களாக:-
மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்றதற்கு பாரத பிரதமருக்கு நன்றி, ஆனால் 2 மடங்கு லாபகரமான விலையையும் விவசாய விலை பொருள்களுக்கு அறிவிக்க வேண்டும், விவசாய குடும்பத்திற்கு 5 வருடங்களுக்கு வட்டியில்லாமல் ருபாய் 5 லட்சம் தருவதாக கூறியதையும் கொடுக்க வேண்டும் என்றும், கோதாவரி – காவிரி இணைப்புக்கு உடனடியாக நிதி ஒதுக்கவேண்டும் என்றும், டெல்லி போராட்டத்தில் இறந்த விவசாயிகள் 700 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடியும் தகுதிக்கு ஏற்றவாறு அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணியும் மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழகத்தில் மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு 1 ஏக்கருக்கு குறைந்தது ரூபாய் 30,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
மாநில அரசு மத்திய அரசிடம் பேசி உரத்தை பெற்று பருவ காலத்தில் தட்டுப்பாடில்லாமல் விவசாயிகளுக்கு உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளா மாநிலத்தில் நூறுநாள் பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவது போல தமிழகத்திலும் நூறு நாள் பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த மாநில அரசு மத்திய அரசின் அனுமதியை பெற்று விவசாயிகளுக்கு உதவிட வேண்டும். காவிரி – அய்யாறு இணைப்பிற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக டெல்லி சென்று போராடுவது பற்றி ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எல்லா விவசாய சங்கம் மற்றும் தலைவர்களை டெல்லி செல்ல அனுமதித்த அரசும், காவல்துறையும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை மட்டும் அக்டோபர் 1-ந் தேதி முதல் இன்று வரை 61 நாட்கள் வீட்டு காவலில் வைத்திருப்பதை வன்மையாக கண்டித்து விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் திருச்சி கரூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.