தமிழகத்தில் வருவாய்த்துறையில் இளநிலை, முதுநிலை வருவாய்த்துறை ஆய்வாளர் (ஆர்ஐ) பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைத்துள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக்க வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அதீதபணி நெருக்கடி அளிப்பதை தவிர்ப்பதோடு, சிறப்பு பணிகள் மற்றும் சான்றிதழ் பணிகளுக்கு வட்டாரம் தோறும் கூடுதல் துணை வட்டாட்சியர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும், பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும், 2 ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியல் மற்றும் நடப்பாண்டுக்கான கோட்டாட்சியர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இன்று (நவம்பர் 26ம்தேதி) முதல் பணிப்புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இப்போராட்டத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட மையம் சார்பில், போராட்ட பிரச்சார இயக்கம் மற்றும் வாயில் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் பிரேம்குமார் வரவேற்றார். சங்க மாநிலத் தலைவர் முருகையன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தும், போராட்டம் குறித்தும் பேசினார். மாவட்டச் செயலாளர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ராமலட்சுமி நன்றி கூறினார்.