திருச்சி மத்திய சிறைச்சாலையில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளில் சேர்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதை போல் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய ஈழத் தமிழர்கள் சுமார் 108 பேர் அடைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் 20ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈழத்தமிழர் உமா ரமணன் என்பவர் முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் சிறப்பு முகாமில் உள்ளவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்புலிகள் கட்சி குடந்தை அரசன். தமிழக ஜனநாயக கட்சி கேகே ஷெரீப், தமிழர் விடியல் கட்சி தலைமை நிர்வாகி ஆகியோர் தலைமையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் மத்திய சிறைச்சாலை உள்ள சிறப்பு முகாமை முற்றுகையிட போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கு மேற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டியளித்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி,
அதிமுகவை தொடர்ந்து திமுகவும் சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்களை அடைத்து வைத்துள்ளது. நீதிமன்றத்தில் பிணை கொடுத்தும் கூட அவர்களை விடுவிக்கப்படாமல் வைத்துள்ளனர். திமுக அரசு இலங்கைக்கு உணவு வழங்கினாலும் இங்கு இருக்கும் ஈழத் தமிழர்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை. ஈழத் தமிழர்கள் மற்றும் சிறப்பு முகாம் விஷயத்தில் தமிழக திமுக அரசு ஒரு கொள்கை நிலைப்பாடு எடுக்கப்பட்ட வேண்டும். சிறப்பு முகாமை உடனடியாக மூட வேண்டும். மேலும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.