சென்னை பாலவாக்கம் பகுதியில் வசித்து வரும் திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த சத்தியா பொன்னழகன் என்பவர் இன்று காலை திருச்சி ஐஜி அலுவலகத்தில் பாலியல் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி. எனது பெயர் சத்தியா, கணவர் குழந்தையுடன் சென்னையில் வசித்து வருகிறேன். மேலும் நான் பொது சேவையும், மக்கள் பணியும் ஆற்றி வருகிறேன். பொதுசேவை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு சென்று கல்விக்காகவும் முத்தரையர் சமுதாய மக்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றேன். மேலும் அனைத்து சாதியினருக்கும் மக்கள் சேவை செய்து வருகிறேன். இந்நிலையில் இந்த சேவையை இனி நீ செய்ய கூடாது என்று வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் K.K.செல்வக் குமார் என்பவரின் தூண்டுதலின் பெயரில் அவர்களது பொறுப்பாளர்கள் என்று சொல்லி எனக்கு பல மாவட்டங்களில் இருந்து கொலை மிரட்டல்களும் மற்றும் தொலைபேசி, வாட்ஸாப் மற்றும் முகநூலிலும் வாயிலாக பாலியல் தொந்தரவும் செய்து வருகின்றனர்.
மேலும் என்னுடைய புகைப்படத்தை தவறுதலாக பயன்படுத்தியும் பல ID களில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து என்னை அசிங்கப்படுத்தியும், அவமானப்படுத்தியும் வருகின்றனர். எனவே, வீர முத்தரையர் சங்கத்தின் தலைவராக இருக்கும் K.K.செல்வக்குமார் மற்றும் அவர்களது பொறுப்பாளர் என்னைப்பற்றி அவதூறு பரப்பியயும், தொலைபேசி, வாட்ஸாப் மற்றும் முகநூலின் வாயிலாக பாலியல் தொந்தரவு செய்து வரும் அனைத்து நபர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என சத்தியா தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி லால்குடி பகுதியில் வெடிகுண்டு வீசிய வழக்கு தொடர்பாக வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் K.K.செல்வக்குமார் தலைமறைவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.