மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் 42,000 கன அடி 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 20,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் திருச்சி புறநகர் பகுதிகளில் பெய்யும் மழை ஆங்காங்கே உள்ள காட்டாறுகள் மற்றும் நீர்நிலைகள் வழியாக அரியாறு, கோரையாறுகள் வழியாக வந்து திருச்சி புத்துார் ஆறுகனை கடந்து குடமுருட்டி ஆறு வழியாக காவிரியில் கலக்குகிறது.
இந்நிலையில் திருச்சி நாச்சி குறிச்சி பஞ்சாயத்து இனியானூர் பகுதியில் உள்ள அரியாற்றின் கரை உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருகிலுள்ள வர்மா நகர் பகுதி மற்றும் அரியாறு கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ள அரியாறு கரையை சரி செய்வதற்காக அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.