நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் பரிந்துரைப்படி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசு வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் தமிழ் தேச மக்கள் முன்னணி வழக்கறிஞர் கென்னடி, தந்தை பெரியார் திராவிட கழக கொள்கை பரப்பு செயலாளர் விடுதலை அரசு ஆகியோர் உழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் முனைவர் குணசேகரன் கண்டன உரை நிகழ்த்தினார்.
முன்னதாக மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் சவரிமுத்து வரவேற்புரை ஆற்றிட மாநில அமைப்பு செயலாளர் சக்தி ரமேஷ் பொருளாளர் ராஜகுரு வடக்கு மாவட்ட செயலாளர் குருநாதன் கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் நன்றி உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் குணசேகரன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் அமைதியாக போராட்டம் நடத்தி நூறாவது நாள் அன்று மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கையை மனுவாக கொடுக்க பேரணியாக சென்ற அப்பாவி பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி 13 நபர்களை படுகொலை செய்தது இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களை கொண்டு விசாரணை ஆணையம் அமைத்தது நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக அரசிடம் அறிக்கையை ஒப்படைத்தார் ஆனால் இந்த அறிக்கையின் படி எவ்வித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. மேலும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக சூளுரைத்த தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குற்றமளித்த படுகொலையாளிகள் யார் என்று தெரிந்தும் அமைதி காப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தவறாக சித்தரித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்று சொன்னால் அவருக்கு எதிராக தமிழக முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.