தமிழகத்தில் அரசுப் பணி மேற்கொள்ளும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு மற்ற அரசுப் பணியாளா்களுக்கு வழங்குவதைப்போல, அரசு கருவூலத்தின் வாயிலாக மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும். பணிச்சுமையை குறைக்க வேண்டும், கருவூலம் வழியாக ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் வருகிற 14 ஆம் தேதி வரை 3 நாட்கள் கவன ஈர்ப்பு விடுப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி திருச்சி  மாவட்டத்தில் இன்று 404 – கிராம  ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி செயலாளர்கள் பணிக்கு வராததால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக வீட்டு வரி,  கட்டிட அனுமதி என பல்வேறு பணி நிமித்தமாக ஊராட்சி மன்ற அலுவலகம் வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

 

இதுகுறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி   கூறும்போது, 

திருச்சி  மாவட்டத்தில் 404 – ஊராட்சிகள் உள்ளன. இதில்  பணியாற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் 3 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளனர். கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு பல்வேறு புள்ளி விவரங்களை கேட்டு ஒரே நேரத்தில் பல பணிகள் தருவதால் மன உளைச்சலுக்கு ஆளாகுவதாகவும், பணிச்சுமை மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் இதனால் கடந்த ஒரு வருடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள் தற்கொலை செய்து கொண்டனர் எனவும், புள்ளி விவரங்கள் கேட்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் எங்களுக்கான மாத ஊதியத்தினை ஊராட்சி மன்றத்தின் மூலம் வழங்காமல் கருவூலம் மூலம் மற்ற அரசு அலுவலர்களுக்கு வழங்குவது போல் வழங்க வேண்டும்.  தமிழகத்தில் உள்ள ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழக அரசு உடனடியாக கிராம ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *