திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஏ எஸ் ஜி லூர்துசாமி மாமன்ற கூட்ட அரங்கில் மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் திருச்சி மாநகர மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் திமுக 48-வது வார்டு கவுன்சிலரும், நகரமைப்புக்குழு தலைவருமான கொட்டப்பட்டு தர்மராஜ் பேசுகையில்,
எனது வார்டுக்கு உட்பட்ட பொன்மலைப் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதில் நமக்கு சொந்தமான இடத்தை அளந்து ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசும்போது, மேயராகிய நீங்கள் டேப் எடுத்துக்கொண்டு அளந்து பார்த்து சொல்லுங்கள் என்று என்னை பார்த்து கூறினீர்கள். இதை நான் நக்கலான பதிலாக தான் பார்க்கிறேன். இப்போது நீங்கள் அதிகாரியை அனுப்புங்கள் என கோபமாக கூறினார். அதற்கு மேயர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை. கட்சி கூட்டத்தில் பேசியதை மன்றத்தில் பேசுவதும், மன்றத்தில் பேசுவதை கட்சிக் கூட்டத்தில் பேசுவதும் தவறான நடைமுறை என்றார். இதைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் கூட்டத்திலிருந்து வழி நடப்பு செய்தார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.