திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் , மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் , இலவச வீட்டுமனைப் பட்டா , பட்டா மாறுதல் , சாதிச் சான்றுகள் , இதரச் சான்றுகள் , குடும்ப அட்டை , முதியோர் உதவித் தொகை , நலத் திட்ட உதவிகள் , அடிப்படை வசதிகள் , திருமண உதவித் தொகை , பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை பொது மக்களிடமிருந்து 611 மனுக்கள் பெறப்பட்டது . மேலும் இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் குடிபோதையில் மனு அளிக்க வந்த வாலிபர் ஒருவர் திடீரென கலெக்டரை நீ வா போ என்று ஒருமையில் பேசினார். இதனைக் கண்ட அருகில் இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக குடிபோதையில் இருந்த வாலிபரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் நடைபெறும் போது காவல்துறையினர் யாரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் இல்லாததால் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களே குடிபோதையில் இருந்த வாலிபர் அங்கிருந்து வெளியேற்றினர்.
அதனைத் தொடர்ந்து வெளியே பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீசார் உடனடியாக உள்ளே வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கலெக்டரை திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர் ஒருமையில் பேசிய சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.