திருச்சி திருவெறும்பூர் கூத்தைபார் கிராமத்தில் உள்ள வடக்கு மாரியம்மன் கோவில் தெரு பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம் திருவரம்பூர் வட்டம் கூத்தைபார் பேரூராட்சியில் உள்ள கிராம அமைப்பான பழைய கிராம அமைப்பில் உள்ள கூத்தைபார் கிராமத்தில் பலதரப்பட்ட சமுதாய மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றோம். மேலும் நாங்கள் வசிக்கும் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவில் சுமார் 300 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் கூத்தைபார் பொது மந்தையில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு விழா கமிட்டியால் ஜல்லிக்கட்டு விழா மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மாதம் 22 ஆம் தேதி கூத்தைபார் பொதுமந்தையில் ஜல்லிக்கட்டு விழா மிகச் சிறப்பாக எவ்வித பிரச்சனையும் இன்றி அமைதியாக முறையில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் எங்கள் பகுதியில் வசிக்கும் கலைச்செல்வன் என்பவர் தனது சுயலாபத்திற்காக இந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்திட உரிமை கோரி அதிகாரிகளும் புகார் செய்து வருகிறார் குறிப்பாக ஜல்லிக்கட்டு நடத்திட எந்த தனிநபருக்கும் தனி அமைப்பிற்கும் எவ்வித உரிமை இல்லை அப்படி இருக்க கடந்த மாதம் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு விழாவினை திரும்பவும் பொது அமைதியை குலைக்கும் வண்ணமும் சமுதாய பிரச்சனை உருவாக்கும் விதமாகவும் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு விழா நடத்திட தற்போது தீய நோக்கத்தோடு சுயநலத்திற்காக கலைச்செல்வன் என்பவர் வருகிற 19ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி கோரியுள்ளார்.
அவருடைய தீய நோக்கத்தை தடுக்கவும் பொது அமைதியை காத்திடவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி வழங்கக் கூடாது என இப்பகுதி பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று அளித்தனர்.