பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி பெருங்கோட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. மகளிர் அணியின் மாநில பொது செயலாளர் கவிதா ஶ்ரீகாந்த் வரவேற்புரை யாற்றினார். மாநில தலைவி உமாரதி ராஜன் தலைமை உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் திமுக அரசு தேர்தலின் போது பொதுமக்களிடம் திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்படும் என தெரிவித்தார். ஆனால் ஓட்டு வாங்கி வெற்றி பெற்று முதல்வர் ஆனதும் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என தெரிவித்து வருகிறார். குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி பள்ளிகளுக்கு வருவது கவலை அளிக்கிறது. எனவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாவட்ட தலைவிகள் அறிக்கை வாசித்தனர். இறுதியாக திருச்சி மாநகர் மாவட்ட மகளிரணி தலைவி ரேகா நன்றி கூறினார். இந்நிகழ்வில் செயலாளர் ரமாதேவி மற்றும் திருச்சி பெருங்கோட்ட மகளிர் அணி மாவட்ட தலைவிகள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.