புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் குடிநீரில் மலத்தை கொட்டிய உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும், தலித் மக்களை விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு சார்பில் திருச்சி சிபிசிஐடி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் செல்லக்கண்ணு தலைமை வகித்தார். சிறப்பு தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், பொருளாளர் மோகனா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சங்க திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கனல்கண்ணன், மாநகர் மாவட்ட செயலாளர் கோவி.வெற்றிச்செல்வன், மாவட்ட பொருளாளர் ஜோன்ஸ், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சலோமி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் பேசுகையில்: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் சம்பவத்தில் காவல்துறை முறையான விசாரணையை நடத்தாது என்பதனால் அதற்கு உயர் பொறுப்பில் உள்ள சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டும், சிபிசிஐடி விசாரணையிலும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கோரும் தன்மை என்பது இந்தியாவில் உள்ளது. வேங்கை வயல் பிரச்சனையில் சட்டம் ஒழுங்கு போலீசார் எந்த நிலைப்பாட்டை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களை விசாரித்தார்களோ அதே நிலைபாட்டை எடுத்து இன்றைக்கு சிபிசிஐடி விசாரணை நடத்துகிறது. பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் 10 மணிநேரம், 12 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆனால் இந்த பாதிப்புகளை ஏற்படுத்திய ஆதிக்க சமூகத்தினர் மீதான விசாரணை என்பது சில நிமிடங்கள் மட்டுமே நடைபெறுவதாக காவல்துறையில் இருக்க கூடியவர்களே சொல்லக்கூடிய நிலை உள்ளது.
ஆகவே உண்மை குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை சிபிசிஐடியும் மேற்கொள்கிறதோ என்ற அச்சம் உருவாகின்ற காரணத்தால் ஆளுகின்ற அரசாங்கம் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இயல்பான வாழ்க்கையை வேங்கை வயலில் இருக்கக்கூடிய பட்டியலின மக்கள் வாழ்வதற்கான நடவடிக்கையை ஆட்சியாளர்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என தெரிவித்தார்.