திருச்சி லால்குடி அருகே செங்கரையூரில் இருந்து வைக்கோலை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் காட்டூர் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது மேலே சென்ற மின் கம்பியில் உரசியதால் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. இதை கவனிக்காத லாரி டிரைவர் தொடர்ந்து லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது காட்டூர் ரயில்வே கேட் பகுதியில் அப்பகுதி இளைஞர்கள் லாரியை மறித்து லாரியில் தீப்பிடித்து எரிவதாக கூறினர்.
இதனையடுத்து லாரியை நிறுத்தி கீழே இறங்கிய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் இது குறித்து அப்பகுதி மக்கள் புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் பாரதி தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் சிவக்குமார் வீரர்கள் அமுதகுமார், கனகராஜ், முருகன்,ரமேஷ் உள்ளிட்டோர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் திருச்சி மாவட்ட உதவி அலுவலர் லியோ ஜோசப் தீ விபத்து குறித்து நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததே தீ விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் லால்குடி செம்ரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் கடந்த வாரம் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதி இளைஞர்கள் தீ விபத்தை தடுத்து் வாகனத்தை காப்பாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.