திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் தூக்கி, ரூபாய் 47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திரவ பிராணவாயு கொள்கலன் மற்றும் ரூபாய் 1.23 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நோய் எதிர்ப்பு குருதி பகுப்பாய்வு இயந்திரங்களை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், திருச்சி மாநகர ஆணையர் வைத்திநாதன், மாநகர மேயர் அன்பழகன்,அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண் ராஜ், சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு…
வருகிற 2024ம் ஆண்டு உள்ளாட்சி தோ்தல் பதவி முடிவடைய உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதல்வரின் அனுமதி பெற்று தமிழகம் முழுவதும் ஒரு குழு அமைத்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருடன் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிய உள்ளோம்.தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் விஸ்தரிப்பு பகுதிகள் அதிகரிக்கப்பட்டு, திருச்சி,கோவை,சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில வார்டுகளில் 10ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. ஒரு சில வார்டுகளில் 20ஆயிரம் பேர் உள்ளனர். எனவே நாங்கள் அமைக்கும் குழு அதனை சரி செய்து அந்த கமிட்டி மறுவரையரை செய்வது தொடர்பாக முடிவு செய்யும். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். திருச்சியில் பறக்கும் பாலம் அமைப்பதில் மெட்ரோ ஆய்வுகுழு தங்களுடைய ஆய்வுகளை முடித்தப்பிறகு தான் பாலம் அமைக்கும் பணி தொடங்கும். மெட்ரோ ஆய்வுகுழு தங்களுடைய ஆய்வை முடிக்கும் வரை பாலம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்தியதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்துக்கும் நாடாளு மன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி உடைய ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சிறப்பான ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார். எனவே, சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் சட்டமன்ற தேர்தல் நடக்கும்.
திருச்சியில் புதிய காவிரி பாலம் பணிகள் தொடங்குவதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. 2 இடங்கள் மட்டும் கையகப்படுத்த வேண்டிய நிலையில் , அதில் ஒன்று மத்திய அரசு அலுவலகம் எனவே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது விரைவில் தொடங்கும்.சித்தமருத்துவ கல்லூரி, பல் மருத்துவ கல்லூரி அமைக்க கேட்டுள்ளோம். இந்த முறை குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் தொடங்கப்பட்டதால், அடுத்த ஆண்டு செய்து தருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். கடந்த ஒரே ஆண்டில் 3ஆயிரம் கோடி, பேருந்து, சாலை, என 1,700 கோடியும், முதல்வர் வழங்கி உள்ளார். சிப்காட்டில் உணவு பதப்படுத்தும் ஆலை தொடங்கப்பட உள்ளது. திமுக ஆட்சியில் திருச்சி புறக்கணிக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் கொடுத்திருக்கிறார். பத்திரிக்கைகள் தான் இப்படி ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. திருச்சியை முதல்வர் நேசிப்பவராக இருக்கிறார் என தெரிவித்தார்.