15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தியாகரசன் தலைமை தாங்கினார் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அமலோற்பவம், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தர்ணா போராட்டத்தை மாநிலத் துணைத் தலைவர் தங்கவேலு துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
இந்த தர்ணா போராட்டத்தின் கோரிக்கைகளாக அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு அறிவித்த தேதி முதல் வழங்க கோரியும், 70 வயது முடிந்தவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரியும், குடும்ப பாதுகாப்பு நிதியை ஐம்பதாயிரத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கிட கோரியும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி காசில்லா மருத்துவத் திட்டத்தை அமல்படுத்திட கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோருவது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.