திருச்சி மாவட்ட மக்கள் மேம்பாட்டு வினையகம் சார்பில் சிறுவர் சிறுமியர்களுக்கான மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் கோடைகால பயிற்சி முகாம் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள கி ஆ பெ விசுவநாதன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இன்று துவங்கியது. இந்த கோடைகால பயிற்சி முகாமிற்கு இயக்குனர் அம்பலவான தலைமை தாங்கினார்.
மகளிர் ஆதரவு மைய ஆலோசகர் ஜெய் பேபி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மகளிர் சட்ட உதவி மன்றம் தலைவரும், வழக்கறிஞருமான நிர்மலா ராணி கலந்துகொண்டு சிறுவர் சிறுமியர்களுக்கான கோடைகால பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு திட்ட அலுவலர் கண்ணன் திட்ட மேலாளர் முத்துக்குமார் திட்ட அலுவலர் ஜெசிந்தா ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.
இந்த கோடைகால பயிற்சி முகாமில் மூன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளி பயிலும் மாணவ மாணவிகளின் தனி திறமைகளை வெளி கொண்டு வரவும், கல்வி அறிவை மேம்படுத்திக் கொள்ளவும் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது. ஈவேரா கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு செயல்முறை பயிற்சிகளை அளித்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.