தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதன் பின்னர் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்த நிலையில் , கோடை வெப்பத்தின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் ஆலோசனை மேற்கொண்டு, பள்ளி திறப்பை மீண்டும் ஒத்தி வைத்தார். அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை புஷ்ப லதா தலைமையில் மேளதாளத்துடன் பூ கொடுத்து இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கவுன்சிலர் முத்து செல்வம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மகளீர் துறை இயக்குநர் முருகேஸ்வரி ஆகியோர் புதிதாக பள்ளி வந்த மாணவ, மாணவிகளுக்கு பேக் மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கினர்.