காவேரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த தண்ணீர் நேற்று முக்கொம்பூர் அணைக்கு வந்தடைந்தது. வந்த தண்ணீரை மகிழ்ச்சியுடன் மலர் தூவி விவசாயிகள் வரவேற்றனர்.
இந்நிலையில் கல்லணையில் இருந்து இன்று காலை காவேரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவேரி வன்னார் கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் தலா 500 கன அடி வீதமும், கல்லணை கால்வாயில் 100 கன அடி வீதமும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் துறை கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள். பழனிமாணிக்கம், ராமலிங்கம், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
பின்னர், அமைச்சர், அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் மலர்கள், நவதானிங்களைத் தூவி வணங்கினர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த தண்ணீரானது கல்லணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றில் உள்ள ஆறுகள் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் ரூபாய் 46 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 3,147.11 கிலோமீட்டர் நீளத்திற்கு சிறப்பு திட்ட நிதியின் கீழ் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.