திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரங்களை தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்பு திறக்கப்பட்டு தணிக்கை செய்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் தமிழ்நாடு தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது….
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,544 வாக்கு மையங்கள் உள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக ஜீலை 4 ஆம் தேதி முதல் வாக்கு பதிவு இயந்திரங்கள், வி.வி.பேலட் இயந்திரங்கம் சரி பார்க்கும் முதல் கட்ட பணி தொடங்கப்பட உள்ளது. வாக்குப்பதிவு நாளில் இயந்திரங்கள் திடீரென கோளாறு ஆவது மிக மிக குறைவு. 0.01 சதவீதம் என்கிற அளவில் தான் இயந்திர கோளாறு திடீரென இருந்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தேவையானதை விட 30 சதவீதம் கூடுதலாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிருப்பில் இருக்கிறது. ஏதாவது தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டால் அங்கு கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். தற்போது தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி 70 சதவீதம் நிறைவு அடைந்துள்ளது.
தேர்தலில் வாக்களிக்க ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. தேர்தலில் வாக்கு பதிவை அதிகரிக்க செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 17 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள வாக்காளர்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் என்றும் தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் உயர்த்துவதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் அலுவலர்களுக்கு இடையே நடத்தப்படும் தெரிவித்தார்.