தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக சத்திய பிரியா , மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் நிலுவையில் உள்ள மனுக்கள், தமிழக முதல்வரின் முகவரி மனுக்கள், இணையவழியில் கொடுக்கப்பட்ட மனுக்கள், மாவட்ட ஆட்சிரியரிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெறபட்ட மனுக்கள், மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக பெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைத்திட வேண்டி கடந்த 6 மாதங்களில் பல சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் (பெட்டிசன் மேளா) நடத்தி பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினிஹாலில் திருச்சி மாநகரத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பிரச்சனைகளை தீர்க்க சிறப்பு குறைதீர்க்கும் முகாம் (Senior Citizen Petition Mela) திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா தலைமையில் அவர்கள் நடைபெற்றது. மேலும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் தங்கள் பிரச்சனை தொடர்பாக காவல் நிலையங்களில் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள மனுக்கள், மற்றும் தற்போது உள்ள தங்களுடைய பிரச்சனை தொடர்பாக 100 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து புகார் வரும் காவல்நிலையத்திற்கு உட்பட்ட காவல் அதிகாரிகளை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா பேசியது..
இன்று திருச்சி மாநகரில் மூத்த குடிமக்களுக்காக சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனுக்கள் தரப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் வாரந்தோறும் புதன்கிழமை சிறப்பு முகாம்கள் நடத்தி புகார் மனுக்களை பெற்று வருகிறோம். இருந்த போதிலும் முதியோர்கள் வர முடியவில்லை அவர்களை அழைத்து வருவதற்கு ஆட்கள் இல்லை, இதுபோல் அவர்களுக்கு சிறு சிறு பிரச்சனைகள் உள்ளது. ஆகையால் அவர்களுடைய பிரச்சினையை தீர்க்கும் வகையாக நேரடியாக அவர்களை சந்தித்து மனுக்களை பெறுவதற்காக இன்று சிறப்பு குறைத்திருக்கும் முகாம் நடத்தப்படுகிறது. திருச்சி மாநகரப் பொருத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் இந்நாள் வரை 2000 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 1700 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு உள்ள பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் கொடுக்கும் மனுக்களை பெற்று கொண்டு நேரடியாக இல்லத்திற்கே சென்று பிரச்சனைகளை சரி செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறை முன்னெடுத்துள்ளது.
இதேபோல் மாதம்தோறும் ஒரு சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் வருகையை பொறுத்து, மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்த பகுதிகளில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு முகாம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுவரை திருச்சி மாநகரில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கண்காணித்ததில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 70 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. குழந்தைகள் சம்பந்தமான புகார்களுக்கு ஏற்கனவே தொலைபேசி எண் கொடுக்கப் பட்டுள்ளது. 24 மணி நேரமும் அந்த தொலைபேசியை தொடர்பு கொண்டு புகாரை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சத்திரம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத பெண்ணை தாக்கிய பெண் காவலர் தனலட்சுமி ஆயுதப்படைக்கு மாற்றி, தொடர்ந்து அந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, முழுமையாக விசாரணை முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும். திருச்சி மாநகரில் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.