திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். கூட்டத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் நகரப்பொறியாளர் சிவபாதம்,
மண்டலத் தலைவர்கள் மதிவாணன் , துர்காதேவி ,ஜெய நிர்மலா , விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 98 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. அப்போது 43-வது தீர்மானத்தை ஒத்தி வைக்குமாறு திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தினர். திமுக கவுன்சிலருக்கு ஆதரவாக அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் இதே கேள்வியை எழுப்பினார்.
இவர்களின் கேள்விக்கு பதில் ஏதும் அளிக்காமல் 98 தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக மாநகராட்சி மேயர் அன்பழகன் அறிவித்தார். இதை கண்டித்து மாநகராட்சி கூட்டரங்கில் இரண்டு திமுக கவுன்சிலர்களும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலர் செந்தில்நாதனும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.