தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 3- வது நாளாக வாழைப்பழத்தை வாயில் வைத்துக் கொண்டு அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல்.விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. ஒரு கிலோ நெல்லுக்கு 54ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாய் வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் நேற்று காலை முதல் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய தென்னிந்திய நதிகள் இனிப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு :- ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவும், அண்ணாமலையும் விவசாயிகளுக்கு அள்ளிக் கொடுப்பதாக பேசுகிறார்கள். ஆனால் விவசாயிகளுக்கு எதுவுமே தரவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், விளைவிக்கும் விளைபொருளுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.
அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய போது, விவசாயிகளுக்கு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளோம் என கூறுகிறார்கள். இதனால் விவசாயிகளின் வாயில் வாழைப்பழத்தை வைத்து விட்டார்கள். ஆகையால் இன்று வாயில் வாழைப்பழத்தை வைத்து எங்களது கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் நாளை சோற்றில் முழு பூசணிக்காவை, மறைக்கும் போராட்டம் நடத்த போவதாக கூறினார்.