மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு தொடர்பான திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, உதயகுமார், தங்கமணி வேலுமணி, கே பி முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதுரை மாநாட்டிற்கு அதிக அளவு மக்களை அழைத்து வர வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே பி முனுசாமி,
ஒ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் அரசியலில் அனாதையாகி விட்டார்கள். ஓ பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கிய போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது தான் குற்றச்சாட்டு வைத்தார். இன்று அதே சசிகலாவுடன் அரசியல் செய்ய நினைக்கிறார் இது அவருடைய கீழ்த்தரமான அரசியல் சிந்தனையை தான் காட்டுகிறது. அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் பறிக்கப்பட்டு விட்ட நிலையில் அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கொடநாடு வழக்கை கையில் எடுத்து எதிரிகளுடன் கூட்டணி சேர்ந்து அது குறித்து தற்போது பேசி வருகிறார்.ஒ. பன்னீர்செல்வத்திற்கு நேற்று சசிகலாவும் தினகரனும் எதிரியாக இருந்தார்கள். இன்று அவர்கள் அவருக்கு நண்பராகி விட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி எதிரியாக மாறி விட்டார். நேரத்திற்கு நேரம் மாறக்கூடியவராக ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார்.அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது அரசின் திட்டங்கள் குறித்து தவறான தகவல் பரப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட தான் செய்யும் அது இயல்பு தான். அது தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி என்றார். இந்தக் கூட்டத்தில் அதிமுக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.