திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்பொழுது திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி கீழத்தெருவை சேர்ந்தவர் மாலதி(35). கணவனால் கைவிடப்பட்ட பட்டதாரி பெண்ணான இவர் – தனது மகளான 8 வயது சிறுமி மற்றும் கண் பார்வை குறைபாடு உடைய தாயாரான பாப்பாத்தியுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் என வாட்டர் பாட்டிலில் அவர் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி கொண்டு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார்.
மூன்று பேரும் மண்னெனையை ஊற்றிக் கொண்ட நிலையில் உடனடியாக அருகில் இருந்த காவல்துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். அப்பொழுது முசிரி கீழத் தெருவிலுள்ள தங்களது வீட்டை மாலதி என்பவர் அபகரிக்க முயற்சி செய்வதாகவும் வீட்டை அபகரிக்க நினைக்கும் மாலதியின் கணவர் காவல்துறையில் இருப்பதால் எங்களை அச்சுறுத்துகின்றனர் எனவும், எங்களைக் காப்பாற்ற வேண்டாம் எங்களை கொன்று விடுங்கள் எனக் கூறி கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த- மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி உடனடியாக அவரை மீட்டு அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அவர்களை அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.