திருச்சி மாநகர் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஆசிரியர் இல்லம் கட்டிட வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் மணிமேகலை, பொதுச் செயலாளர் மயில், மாநில பொருளாளர் மத்தேயு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அவை பின் வருமாறு.. திமுக தனது சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்றும், தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவோம் என்றும், கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்குவோம் என்றும், கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்குவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையிலும் மேற்கண்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முன்வரவில்லை என குற்றம் சாட்டினர். இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ, டிட்டோஜாக் உள்ளிட்ட கூட்டமைப்புகள் போராட்டங்கள் அறிவித்ததை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பலமுறை நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் எவ்வித பயன்களையும் அளிக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. மேலும் தொடக்க கல்வி துறையில் நடைமுறையில் உள்ள என்னும் எழுத்தும் திட்டத்தால் 1 முதல் 5 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இத்திட்டத்தால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் குறைந்து நாள்தோறும் இணையவழியில் தேர்வு நடத்துவதும், மதிப்பீடு செய்வதுமே நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்து திரும்பப் பெற்று ஆசிரியர்கள் முழு நேரமும் சுதந்திரமாக மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாள்தோறும் EMIS இணையதளத்தில் தேவையற்ற பல்வேறு புள்ளி விவரங்களை பதிவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதால், ஆசிரியர்கள் நாள் முழுவதும் புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியையே செய்ய வேண்டி உள்ளது. இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் குறைந்து மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது. எனவே EMIS இணையதளத்தில் புள்ளி விவரங்களை பதிவு செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து முழுமையாக கற்பித்தல் பணியில் ஈடுபட தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும். அதேபோன்று ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திட வேண்டும். மேலும் ஆசிரியர்கள் பதவி உயர்வில் செல்ல தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய தேவை இல்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து, ஒரு சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் சார்பில் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி அன்று சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணியாக சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலியிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்துவதற்கான மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சார்ந்த வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்படுகிறது.