எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள தனியார் அரங்கில் இன்று அதன் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றதில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர், இக்கூட்டத்தில் மத்தியில் மற்றும் மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல்கள், மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்… அப்போது அவர் கூறுகையில், நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 விண்கலத்தை தடம்பதிக்க செய்து சாதனை புரிந்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துக்கொண்டதுடன், மத்திய அரசுக்கு எதிரான குரல்களை முடக்கும் வகையில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வீடுகளில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்றவற்றை கொண்டு சோதனையை மேற்கொண்டதை கண்டிப்பதுடன், பல்லாண்டுகளாக சிறையில் வாடும் 37 இஸ்லாமிய சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும், செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த தினத்தில் விடுதலை செய்யாவிட்டால் மாபெரும் போராட்டங்களை எஸ்டிபிஐ கட்சி நடத்தும் அதற்கு முன்னோட்டமாக வருகிற 9ம் தேதியன்று ஜனநாயக தலைவர்களை ஒருங்கிணைத்து சட்டமன்றத்தை நோக்கி பேரணியை எஸ்டிபி கட்சி நடத்தும் என எச்சரிக்கை விடுத்தார்.
நீட் தேர்வால் பல மாணவ மாணவிகள் உயிரிழந்துவரும் நிலையில், தமிழகத்தில் நீட்டுக்கு எதிரான மாபெரும் இயக்கத்தை தமிழக அரசு துவங்க வேண்டும். தமிழக மக்களுக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை கூறிவரும் ஆளுநர் ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றார். ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபு டிஜிபி ஓய்வுபெற்ற மறுநாளே டிஎன்பிசி தலைவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டது சரியானது அல்ல, பல்வேறு கல்வியாளர்கள் தமிழகத்தில் இருக்கும் பட்சத்தில் டிஜிபியாக பதவி வகித்தார் என்பதற்காக டிஎன்பிசி தலைவராக நியமிப்பது என்பது திமுக தவறான முன்மாதிரியை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினார், அவரை மாற்றி விட்டு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த கல்வியாளரை நியமிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் மேலும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 3.5% இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் என் மக்கள் என் மண் என்ற பயணத்தை ஊழலுக்கு எதிராக அண்ணாமலை செய்கிறார், இதற்கு அண்ணாமலைக்கு தகுதியே இல்லை. ஊழலையே முகாந்திரமாகக் கொண்டிருக்கும் பாஜக எவ்வாறு ஊழலுக்கு எதிரான பேரணி நடத்த முடியும். மேலும் தமிழகத்தில் நாங்குநேரி, வேங்கை வயல் போன்று சாதியின் பெயரால் நடைபெற்றுவரும் சம்பவங்கள் கவலையை அளிப்பதுடன், 37 மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுத்திட வேண்டும். எதிர்க்கட்சியாக எவ்வாறு செயல்பட வேண்டுமோ அதன்படி இந்தியா கூட்டணி செயல்பட வேண்டும், அதனை வீரியமாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைப்பதாகவும் தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் மூலமாக ஐபிஎஸ் ஆக்கப்பட்டவர் அண்ணாமலை, கர்நாடகாவில் அவர் ஒன்றும் செய்யவில்லை. அண்ணாமலையின் பயணம் பெரும் தோல்வியை தழுவியுள்ளது, தமிழகத்தில் அவருக்கு எந்த ஒரு செல்வாக்கும் இல்லை. இப்படி எல்லாம் சீனைப் போட்டு தமிழகத்தில் ஜெயிக்க முடியாது என்றார்.
ஆளுநர் தனது பொறுப்புக்கு சம்பந்தமில்லாதவற்றை கூறி வருகிறார், அதானி அம்பானி மற்றும் ஆர்எஸ்எஸ் ஊதுக்குழலாக அவரது அறிக்கைகள் பேச்சுக்கள் உள்ளது. தமிழக அரசு ஆளுநருக்கு எதிரான நிலைப்பாட்டை சரியாக கையாளவில்லை, அதேநேரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முழுமையாக செயல்படுத்த அனுமதித்தாலே போதுமானது ஆளுநர் தனி அரசாங்கம் நடத்துவது தேவையில்லை. மதவாதம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் முதல் நிலையில் எஸ்டிபிஐ கட்சி உள்ளது, தேர்தலின் போது பொதுக்குழு கூடி கூட்டணி தீர்மானிக்கும். தஞ்சை டெல்டா மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மோசமான வானிலை நிலவுவதுடன் தென் மாவட்டங்களில் குடிக்க தண்ணீர் கூட இல்லாத பஞ்சம் நிலவுகிறது, தமிழக அரசு இதனை வறட்சிப் பகுதியாக அறிவித்து நிவாரணம் அளிக்க வேண்டும். மலையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கூட அரசு நிவாரணம் வழங்கவில்லை, மத்திய மாநில அரசுகள் நினைத்தால் மட்டுமே விவசாயத்தை பாதுகாக்க முடியும். வேளாண்மையை காப்பாற்ற விட்டால் மனித சமுதாயத்தை காப்பாற்ற முடியாது என்பதனை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விவசாயிகளுக்கு உதவிகளை செய்திட வேண்டும். போராடித்தான் விவசாயத்தை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு அரசுகள் விவசாயிகளை கொண்டு வந்து விட்டது, அரசாங்கம் விவசாயிகளை மட்டும் போராட அனுமதிக்க கூடாது அவர்கள்தான் நமக்கு உணவு அளிப்பவர்கள், அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையிலிருந்து தமிழக அரசு விலகி விடக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்தார்.