தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 35 – வது நாளான இன்று கைகளை சங்கிலியால் கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாய கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது ,என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டுகிறோம். 100 நாட்கள் வேலையாட்களை கோடை காலமான 4 மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று வேண்டுகிறோம். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவிட வேண்டுகிறோம்.
மேலும் காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் ,என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது.. காவேரி ஆற்றில் இருந்து முறையாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை ஆகையால் விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில் இன்று கைகளை சங்கிலியால் கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் கர்நாடகா அரசிடமிருந்து தமிழ்நாடு விவசாயிகளுக்கு 1 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது என தெரிவித்தார்.