திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர்த் தப்பினர்.
லால்குடி ரவுண்டானா பகுதியில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் செல்ல குழாய் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இப்பணிகள் நேற்று முடிவடைந்த நிலையில் குடிநீர் குழாய்க்காக பறித்த குழியை முறையாக மண் நிரப்பாமல் அரைகுறையாக மூடி உள்ளனர். இன்று திருச்சியில் இருந்து லால்குடி, அரியலூர் வழியாக ஜெயங்கொண்டம் செல்லும் அரசு பேருந்து ஒன்று பயணிகள் ஏற்றி சென்று கொண்டிருந்தது. பேருந்து முழுவதும் பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லால்குடி ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் செல்ல தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பேருந்து சிக்கிக் கொண்டது. இதில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக காயமின்றி பயணிகள் அனைவரும் உயிர்த் தப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளார்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமலும், அரசு பேருந்தை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.