திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெறுகிறது.இந்நிகழ்வில் திருச்சி திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று உள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இ சேவை மையங்களில் மேல்முறையீடு தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது சர்வர் கோளாறு உள்ளிட்டவை சரி செய்யப்பட்டு மகளிர் உரிமைத்தொகை தொடர்பான பணிகள் தொய்வின்றி நடைபெறுகிறது. இ சேவை மையங்கள் மூலம் நடைபெறும் சிறப்பு முகாம்களே போதுமானது. ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளவர்கள், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில்லை.
ஆதார் எண், வங்கி கணக்கு எண் இணைப்பில் உள்ள தவறு காரணமாக சிலருக்கு மாற்று வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனையும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போல் அனைத்து மகளிர்க்கும் மாதம் ஆயிரம் வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்…அதிக வருமானம் பெறுபவர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் என்பது பெரிதாக இருக்காது அதனால் தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்றார்.