திருச்சி கொட்டப்பட்டு 46வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஐஸ்வர்யா எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி அருகே மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் பம்பிங் தொட்டி அமைப்பதற்கு ராட்சத ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்தப் பகுதியில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் பம்பிங் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொன்மலை காவல் நிலைய போலீசார் அப்பகுதி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்;- திருச்சி 46 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஐஸ்வர்யா எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் பம்பிங் தொட்டி வேறு இடத்தில் அமைக்கப் போவதாக தெரிவித்தனர். ஆனால் அந்த அப்பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தலையிடு காரணமாக தற்போது கழிவு நீர் சேகரிப்புத் தொட்டி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் கைலாஷ் நகர் ஐஸ்வர்யா எஸ்டேட் வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் இந்த இடம் பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் . மேலும் குடிநீர் தேக்க தொட்டி அருகிலேயே கழிவு நீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்படுவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து கடந்த மாதம் திருவெரம்பூர் தொகுதி எம்எல்ஏவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இந்த கழிவு நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்தோம் எங்கள் மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் இப்பகுதியில் கழிவுநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்படாது என உத்தரவாதம் அளித்தார். ஆனால் இன்று திடீரென மாநகராட்சி சார்பில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வார்டு கவுன்சிலர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை . எனவே தமிழக முதல்வர் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இப்பகுதியில் கழிவு நீர் தேக்க தொட்டி அமைப்பதை கண்டித்து இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் எனக்கூறினர்.