108 வைணவ தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் இன்று தொடங்கியது. கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
வரும் டிசம்பர் 12ம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது, பன்னிரண்டாம் தேதி பகல்பத்து விழா தொடங்குகிறது, அதனைத் தொடர்ந்து பகல் 10 விழாவின் பத்தாம் திருநாளான மோகினி அலங்காரம் 22 ஆம் தேதியும் இராபத்து திருவிழாவின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிச-23ம் தேதி அதிகாலை 4மணிக்கு நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் இனிதே நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினை மற்றும் அறநிலையத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.