காவேரி நீர் தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதேபோல காவேரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவையும் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு அந்த உத்தரவை செயல்படுத்தாமல் இருந்து வருகிறது. கர்நாடக அரசின் அந்த போக்கை கண்டித்து பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிற்கு நதி நீத் பங்கீட்டு உரிமையை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில்
திருச்சி முக்கொம்பு மேலணையில் பேரணி மற்றும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முக்கொம்பு சுற்றுலாதல நுழைவாயிலிலிருந்து பேரணியாக புறப்பட்டு மேலணையில் நடந்து சென்று கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணி மற்றும் மனித சங்கிலியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிற்கு காவேரி நீரை தர மறுக்கும் கர்நாடகாவிற்கு தமிழ்நாட்டிலிருந்து மின்சாரம் வழங்கக் கூடாது என மாநில அரசையும் மத்திய அரசையும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மத்திய அரசு அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். காவேரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது கிடப்பில் போடப்பட்டுள்ள காவேரி கோதாவரி இணைப்பு திட்டம், காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் விவசாய கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்தால் கால்நடைகளை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி தெரிவித்தார்.