இயேசு சபையினரால் 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லசாக் இயக்கத்தின் பொன்விழா சங்கமம் திருச்சி புனித வளனார் கல்லூரியில் இன்று நடைபெற்றது. புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ், லசாக் இயக்க இணை நிறுவனர் அருள்முனைவர் ஜோசப் சேவியர், பள்ளியின் தாளாளர் அருள்திரு. இஞ்ஞாசி, பள்ளியின் தலைமையாசிரியர் அருள்திரு ஜார்ஜ், பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் அருள்முனைவர் ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதில் லசாக் மாணவர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்தி சமுதாயத்தில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும், புதிய சமுதாயம் படைத்திட முயற்சிக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில் இன்றைய லசாக் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் சமுதாய விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் ஆளுமைப் பண்பில் சிறந்து விளங்குபவர்களாகவும், தகைசால் தலைமை பொறுப்பேற்பவர்களாக விளங்கவேண்டும் என கூறினார். முன்னதாக தமிழாசிரியர் திருமதி. பா. ஜெயலீனா வரவேற்புரையாற்றினார். அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் ஆசியுரை வழங்கினார். அருள்முனைவர் ஜோசப் சேவியர் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வுகளை தமிழாசிரியர்கள் விஜயா, ஸ்டீபன் மைக்கில் ராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். லசாக் இயக்குநர் அருள்பணி மனுவேல் சவரியார், இணை இயக்குநர் அருள்சகோ ஜான் புஷ்பராஜ், ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் மதுரை, திண்டுக்கல், ஓரியூர், தேவகோட்டை, பரமக்குடி, திருச்சி முதலிய நகரங்களில் உள்ள 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக லசாக் மாணவர்கள் அர்ஜூன், ரக்ஷனா நன்றி உரையாற்றினர்.