இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் திருச்சி மாவட்ட ஏ ஐ டி யு சி சாலையோர தரைக்கடை சிறு கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏ ஐ டி யு சி பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்தக் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் காவேரி குடிநீர் தட்டுப்பாடு இன்றி அனைவருக்கும் வழங்கக் கோரியும், சோமரசம் பேட்டையில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருந்து செயல்படுத்தவும், அதனை தர உயர்த்தி விரிவுபடுத்தி இன்னும் கூடுதல் படுக்கை வசதியுடன் புதிதாக அமைத்து தரக் கோரியும்,
அதேபோல் அரசு சித்த மருத்துவமனையை விரிவுபடுத்தி படுக்கை வசதியுடன் 24 மணி நேரமும் மருத்துவர் இருந்து செயல்படுத்த கோரியும் மகளிர் காவல் நிலையம் அமைக்க கோரியும், அதேபோல் நாச்சி குறிச்சி, சோமரசம்பேட்டை, அல்லி துறை, வயலூர் உள்ளிட்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் தரைக்கடை சிறு கடை வியாபாரிகளை அந்தந்த பஞ்சாயத்து வாரியாக கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வியாபாரிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வியாபாரிகள் நலக்குழு தேர்தல் நடத்த கோரியும்
மேலும் சோமரசம்பேட்டை பகுதிகளில் வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய அரச இடம் தேர்வு செய்து கடைகள் கட்டி வியாபாரிகளுக்கு இடம் வழங்க கோருவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை மனுவாக எழுதி ஒன்றிய தலைவர் நிர்மலா மற்றும் ஒன்றிய செயலாளர் மேகராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர். மேலும் இந்த கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.