திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக இன்று அளித்தனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் ஒஎப்டி ஒப்பந்த தொழிலாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் குடும்பத்துடன் வந்து இன்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்
அந்தக் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 18 வருடத்திற்கு மேலாக வேலை செய்த ஒப்பந்த தூய்மை பணியாளர்களை வேலையில் இருந்து முறைகேடாக நீக்கிய திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகம் கடந்த 13 ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் ஒரு சுமூகமான முறையில் தீர்வு ஏற்பட்டது. அதில் தூய்மை பணியாளர்களை மீண்டும் பணி அமர்த்துவதற்கு எந்த ஆட்சேபனை இல்லை என்று நிர்வாகம் கோட்டாட்சியர் முன்பு எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தனர் ஆனால் தற்பொழுது நிர்வாகம் ஒப்பந்தக்காரர்களிடம் இந்த தூய்மை பணியாளர்களை எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணியினை வழங்கிட கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் இது குறித்து பிஜேபி மாவட்ட தலைவர் ராஜசேகரன் கூறுகையில் :-ஓஎப்டி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணியினை வழங்கிட கோரியும் அதேபோல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ள பெரும்பிடுகு முத்தரையர், பன்னிர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகியோரின் மணி மண்டபங்களை உடனடியாக திறக்க வேண்டும் எனவும், அதேபோல் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையையும் திறக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார்.