மதுரை மாவட்டம் அண்ணாநகர் பகுதிக்கு உட்பட்ட மதிச்சியம் மற்றும் அரசு இராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனத் திருட்டு நடைபெற்று வருவதாக மதுரை மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதனைத் தொடர்ந்து காவல் ஆணையர் உத்தரவுப்படி அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் சுரேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது .
தனிப்படையினர் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் பழைய குற்றவாளியான மதுரையைச் சேர்ந்த பாண்டி @ லொடுக்குப்பாண்டி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் திண்டுக்கல்லை சேர்ந்த ராஜேஷ்குமார் , கிருபாகரன் மற்றும் கொடிமங்கலத்தைச் சேர்ந்த தீபன்பிரசன்னகுமார் ஆகியோர்களுடன் சேர்ந்து மேற்கண்ட இடங்களில் தொடர் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது .
விசாரணையில் குற்றவாளிகள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமணை வளாகத்தில் 8 இரு சக்கர வாகனங்களைத் திருடியதாகவும் , ஊமச்சிகுளத்தில் 3 இரு சக்கர வாகனங்களைத் திருடியதாகவும் , அலங்காநல்லுாரில் 2 இரு சக்கர வாகனங்களைத் திருடியதாகவும் ஒப்புக்கொண்டனர் . இவர்கள் கொடுத்த தகவலின் படி இந்த 13 இரு சக்கர வாகனங்களை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் மற்றும் ரமணா ஆகியோரிடம் கொடுத்து விற்பனை செய்ததாக தெரியவந்தது . மேற்கண்ட குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சுமார் 9 லட்சம் மதிப்புள்ள 13 இரு சக்கர வாகனங்களையும் தனிப்படையினர் பறிமுதல் செய்தனர் . அனைத்துக் குற்றவாளிகளும் மதுரை 6 ஆம் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் . சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையிரை மதுரை மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டு தெரிவித்தார்.