திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த மரினா பேகம் என்பவர் புகார் மனு ஒன்றை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் இன்று அளித்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்த மெரினா பேகம் ஆகிய எனக்கும், ஆதம் தீன் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமண நடைபெற்றது. திருமணமான 42 வது நாளில் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் நான் எனது தந்தை தாயுடன் சென்று விட்டேன் இந்நிலையில் எனது திருமணத்திற்காக எனது கணவரின் தாயாரிடம் கொடுத்த நகை மற்றும் திருமண செலவு ஆகியவற்றை திருப்பி தருமாறு கேட்டதற்கு என் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் கணவரின் குடும்பத்தார் புகார் அளித்தனர். இதனால் நான் மற்றும் எனது குடும்பத்தார் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி விட்டோம்.
மேலும் இது குறித்து மரினா பேகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எனது தாய் தந்தை கடன் வாங்கி என் திருமணத்தை நடத்தி வைத்தனர். ஆனால் எனது கணவர் ஆதாம் தீன் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு எனது கணவரின் தாயாரும், பாட்டிக்கும் சம்மந்தம் இருக்கும் என அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் எனது புகாரை ஏற்க மறுத்து எனது செல்போன் மற்றும் எனது கணவரின் செல்போன் ஆகியவற்றை காவல் நிலையத்தில் வாங்கி வைத்துக் கொண்டனர் மேலும் எனது கணவரின் இறப்புச் சான்றிதழ் இந்நாள் வரை எனக்கு தரவில்லை. இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் கேட்டதற்கு என் மீதும் என் தந்தை மீதும் பொய் வழக்கு போடுவதாக அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் மிரட்டி வருகிறார். இதனால் கடந்த ஆறு மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து வருகிறேன். ஆகவே எனது நகைகளை மீட்டு தந்து எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்க கோரி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.