திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட 8 கோட்டங்களை 17 கோட்டங்களாக மாற்றி அந்த கோட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமித்து மாவட்ட தலைவர் ரெக்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தார். மேலும் அந்த அறிவிப்பில் திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம், பாலக்கரை கோட்டத் தலைவர் இனிகோ ஜெரால்ட், மலைக்கோட்டை கோட்ட தலைவர் ரவி, உறையூர் கோட்டத் தலைவர் பிரேம், பொன்மலை கோட்டை தலைவர் செல்வகுமார், ஆகிய ஐந்து கோட்டத் தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் குவிந்த நீக்கப்பட்ட ஐந்து கோட்டத் தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், மாவட்ட தலைவர் ரெக்ஸ் எடுத்த தன்னிச்சையான முடிவு. இது நாங்கள் நியமிக்கப்பட்ட கோட்டத் தலைவர்கள் அல்ல. காங்கிரஸ் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் காலம்தான் ஆகிறது. எங்களது பதவி காலம் மூன்று வருடம் உள்ளது. இதில் ஒரு வருடம் போனால் இன்னும் இரண்டு வருட காலம் பதவி இருக்கிறது. எனவே இப்படி இருக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்டத் தலைவர் ரெக்ஸ் எப்படி நியமிக்க முடியும். இது அவரது தன்னிச்சையான முடிவு. இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும், இளம் தலைவர் ராகுல் காந்திக்கும், மாநில தலைவருக்கும் தகவல் அனுப்பியுள்ளோம். இதனை ஏற்க மாட்டோம் என்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.