திருச்சி மறை மாவட்டத்திற்குப்பட்ட, அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி, தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அம்மாபேட்டை புனித சந்தியாகப்பர் ஆலயத்தின், கிளை பங்குகளான ஆலம்பட்டி புதூர், பாரப்பட்டி,
பூலாங்குலத்துப்பட்டி உள்ளிட்ட ஏழு கிளை பங்குகளின் திரு குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா ஆலயத்தில் நடைபெற்றது.
அம்மாபேட்டை புனித சந்தியாகப்பர் ஆலய பங்குத்தந்தை ஜோ.ஜோ லாரன்ஸ் தலைமையில், பங்கு மக்கள் நடத்திய அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைக்கும் வகையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில்,
அம்மாபேட்டை சுற்றியுள்ள பல்வேறு ஆலயங்களில் இருந்தும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்று மதத்தினை சேர்ந்த ஊர் மக்கள் கலந்து கொண்ட சமத்துவ ரங்கோலி போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் மூன்று பேர் கொண்ட குழுவாக, 100 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு, 40 க்கும் மேற்பட்ட வண்ண ரங்கோலி கோலங்களை வரைந்தனர்.
இந்த ரங்கோலி கோலங்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து மக்களின் ஒற்றுமையையும், சமத்துவத்தையும் குறிக்கும் வகையிலும், தமிழர் திருநாளான பொங்கல் விழாவை வரவேற்கும் வகையிலும், சிறு தானியங்களைக் கொண்டும், பலவித வண்ண கோலங்களைக் கொண்டும், கண்ணை பறிக்கும் வகையில் அமைத்திருந்தனர்.
மேலும் விழாவில், சிறுவர், சிறுமியர்களுக்கான பலூன் உடைத்தல், ஓட்டப்பந்தயம், சில்வர் ஸ்பூன், ஸ்லோ சைக்கிள் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 3000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 2000 ரூபாயும் வழங்கப்பட்டது.
விழாவில், அம்மாபேட்டை, தலைமை அருள் சகோதரி கீதா, அக்னி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் காந்தி (எ) அழகப்பன், இனாம் குளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் அப்பீஸ்தீன், அருள்பணி சேசு சத்தியநாதன், அருள் சகோதரிகள், பங்கு பேரவையினர், ஊர் மணியக்காரர்கள், விழா குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.