திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழித்தடத்தில், தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் உள்ளது.கடந்த 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தின் இடது புறம் உள்ள பகுதிகளில் பாலத்தின் வெளிப்புற கற்கள் நேற்று திடீரென சரிந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் விழும் அபாயம் ஏற்பட்டது. ஜி கார்னர் பகுதியில் உள்ள இந்தப் பாலத்தின் தாங்கு தூண்களில் ஒன்று சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜி-கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் பகுதி கடந்த 12ம் தேதி சேதமடைந்தது. இதையடுத்து திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து சென்னை ஐஐடியிலிருந்து நிபுணர் அழகு சுந்தரம் ஏற்கனவே இரண்டு முறை ஆய்வு மேற்கொண்டுள்ளார். இன்று சேதம் அடைந்த பகுதியில் உள்ள சிமெண்ட் கற்களை பெயர்த்து எடுத்து பாலத்தின் உள்ளே சேதம் குறித்து ஆய்வு செய்யும் பணி துவக்கினார். இந்நிலையில் பாலத்தின் மேலே தூண் பகுதியில் 3 துளையிட்டு முதற்கட்ட பணி துவக்கி உள்ளனர். ஐஐடி போராசிரியர் அழகுசுந்தரம் அறிவுரைப்படி தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் துளையிட்டு பாலத்தின் உள்ளே என்ன சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய உள்ளனர். மேலும் பாலத்தை சீரமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
பாலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் ஜீ கார்னர் பகுதியில் இருந்து போக்குவரத்து ஒரு வழிப்பாதை யாக திருப்பி விடப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலையில் ஒரு பகுதியை அடைத்து விட்டு திருச்சி வரும் மார்க்கத்தில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றன கனரக வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய பயணிகள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையே உபயோகித்து வருகிறார்கள் இந்நிலையில் பொங்கல் விழாவிற்காக விடப்பட்டிருந்த விடுமுறை வரும் புதன்கிழமை முடிவடைய உள்ள நிலையில் திருச்சி மற்றும் மதுரை இதர மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய பயணிகள் இச்சாலையை பயன்படுத்தும் பொழுது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இதற்காக மாவட்ட நிர்வாகம் மணப்பாறை முசிறி துறையூர் வழியாக வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.