திருச்சியில் NH 67 தேசிய அரை வட்ட சுற்றுச்சாலைக்காக காவிரி பாசன 13 ஏரிகள் அழிக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விசாரணை நடத்த வேண்டும். ஏரிகளில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்காமல் உயர்மட்ட பாலங்கள் அமைக்க வேண்டும். கார்ப்பரேட்டுக்கு துணை போகும் மத்திய மாநில அரசுகளையும், வருவாய்த்துறை, நீர்வளத்துறையின் பொறுப்பற்ற செயலை கண்டித்தும், நீதித்துறையினர் ஏரிகள் வழக்கை காலம் கடத்தாமல் உடனடியாக பட்டியல் இட்டு விரைந்து விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை தலைமையில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தண்ணீர் அருந்தா தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் குறித்து மாவட்டத் தலைவர் ம.ப.சின்னதுரை கூறுகையில்…இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு சென்று சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதாக கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா கடிதம் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கை விடுவோம். இல்லையெனில் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக தமிழக முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் கணேசன், சாமானிய மக்கள் நலக் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ஷைனி, சாமானிய மக்கள் நல கட்சி மாவட்ட விவசாய அணி தலைவர் ஜோசப் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.