தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி இந்திராகாந்தி கல்லூரி மைதானத்தில் இன்று விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்க பின்பற்ற வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வலியுறுத்தும் வகையிலும், வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது இ.ஆர் மேல்நிலைப்பள்ளி வழியாக அண்ணா சிலை ரவுண்டானா, காவேரி மேம்பாலம், மாம்பழச் சாலை, திருவானைக்காவல் மேம்பாலம், கொள்ளிடம் செக்போஸ்ட் வழியாக ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் சென்று நிறைவடைந்தது. மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட டிரைவிங் லைசன்ஸ் பள்ளி வாகனங்கள் மற்றும் கார் விற்பனையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், வட்டார போக்குவரத்து அலுவலர் குமார், காவல் உதவி ஆணையர் (போக்குவரத்து) ஜோசப்நிக்சன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அருண்குமார், முகமது மீரா, பிரபாகர், செந்தில் சுப்ரமணியம், சத்யா, ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், வாகன விற்பனையாளர்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.