தமிழகத்தில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது. திருச்சியில் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி வந்தது. இதன் காரணமாக மக்கள் வெளியே நடமாட முடியாமல் முடங்கி கிடந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில்
திருச்சியில் மட்டும் மழை பெய்யாமல் மக்களை ஏமாற்றி வந்தது. இந்த நிலையில் நேற்று புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக சமயபுரத்தில் 65 மில்லி மீட்டர் மலையும் தேவி மங்கலத்தில் 47 மில்லி மீட்டர் முசிறி 56 மில்லி மீட்டர் துறையூர் 19 என புறநகரில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் 282.1 மில்லி மீட்டர் மழை பதிவானது ஆனால் மாநகரில் மழை போக்கு காட்டி வந்தது. இந்த நிலையில் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் திருச்சி தலைமை தபால் நிலையம், மத்திய பஸ் நிலையம் தென்னூர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாரதிதாசன் சாலைப் பகுதியில் சாலையில் குளம் போல் மழை நீர் தேங்கியது. இதில் வாகன ஓட்டிகள் நீச்சல் அடித்தபடி சென்றனர். கோடை வெயிலுக்கு கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.