திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மருதூர் ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் உரிய விதிமுறைகளை அதிகாரிகள் கடைபிடிக்காமல், இறந்தவர்கள் பெயரிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை பயனாளிகளாக காட்டியும், ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இதுபோன்று 70 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என லால்குடியைச் சேர்ந்த உதயகுமார் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இப்பிரச்னையில் கடைநிலை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து பிரச்னையை முடிக்க பார்க்கக் கூடாது. தவறு செய்த அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து எஸ்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என கூறியிருந்தனர்.
மீண்டும், கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் மீது குற்றவியல்நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைஎடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி, முறைகேடு நடந்ததாக கூறப்படும் 2019ம் ஆண்டு முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றி, தற்போது வேறு ஒன்றியங்களில் பணியாற்றி வரும், துறையூர் ஓவர்சியர் வெங்கடேஷ்குமார், முன்னாள் தொழில்நுட்ப உதவியாளர் கிளின்டன், தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார், புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், புள்ளம்பாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், மண்ணச்சநல்லுார் மண்டல துணை வட்டார வளரச்சி அலுவலர் லோகநாதன், புள்ளம்பாடி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்ராஜ், அந்தநல்லுார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளிதாஸ், இளநிலை பொறியாளர்கள் ரங்கநாதன், தாத்தையங்கார்பேட்டை பரணிதர், உவர்களுக்கு உடந்தையாக இருந்நதாக தனியார் நபர் தமிழ்செல்வன் ஆகிய 11 பேர் மீதும் சட்டத்துக்கு புறம்பாக, போலி ஆவணங்களை உருவாக்குதல், அரசுக்கு இழப்பு ஏற்படுத்துதல், கூட்டு சதி, ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 12ம்தேதி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஆணையராக பணியாற்றிய ரவிச்சந்திரன் என்பவர் நேற்று (31-05-24) ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்று முன்தினம் (30-05-24) இரவு சஸ்பெண்ட் செய்யபட்டார்.