திருச்சி மாநகரில் நேற்று மாலை முதல் இரவு வரை காற்று, இடி, மின்னலுடன் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மின் கம்பங்களும், மின் வயர்களும் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது. டிவிஎஸ் டோல்கேட் அருகிலுள்ள உலகநாதபுரம் கருணாநிதி தெருவிலும் நேற்று மாலை பெய்யத் தொடங்கிய உடன் மின்சாரம் தடைபட்டது. எனினும், சில இடங்களில் மின் இணைப்பில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரியத்தினருக்கு தகவல் அளிக்க, அவர்கள் வந்து முழுமையாக மின் இணைப்புகளை துண்டித்தனர்.
இரவு, 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள பிள்ளையார்கோயில் அருகிலிருந்த மின்சார இணைப்பில் இருந்து ஏற்பட்ட மின்கசிவால் அங்குள்ள வயர் தீப்பற்றி எரிந்ததோடு, அருகிலிருந்து சுந்தர்ராஜ் மகன் ஆட்டோ டிரைவர் ஆசை என்பவரது, ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் வீட்டின் மீது விழுந்து தீப்பற்றியது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் வீட்டிற்குள் இருந்த பொருட்கள் தீப்பற்றியதோடு, அதனால், உள்ளே இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்கள் விரைந்து விரைந்து தீயை அணைத்தனர்.இவ்விபத்தில் வீடு முழுவதும் எரிந்ததோடு, அதிலிருந்து பொருட்களும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் எந்தப்பாதிப்பும் இல்லை. இவ்விபத்து குறித்து கன்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, டிவிஎஸ் டோல்கேட் அருகே மின்சார வயர் அறுந்து விழுந்ததில், அவ்வழியே சென்ற பெண் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.