திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும் ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் பெருமாளுக்கு நடத்தப்படும். மிகவும் விஷேசமான ஜேஷ்டா பிஷேகத்தின் போது இன்று காலை தங்ககுடம் மற்றும் வெள்ளி குடங்களில் காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சனம் எனப்படும் புனிதநீர் எடுக்கப்பட்டது.

அதன் பின்னர் தங்கக்குடமானது கோவில் யானை ஆண்டாள் மீது வைக்கப்பட்டது. வெள்ளிக்குடங்களில் நிரப்பப்பட்ட புனிதநீர் கோவில் அர்ச்சகர்களால் சுமந்து வரப்பட்டது. இந்த ஊர்வலமானது நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க ராஜகோபுரம் வழியாக கோவிலுக்கு வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் வழிநடங்கிலும் நின்று வணங்கி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மூலவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கிகளைக் களைந்து திருமஞ்சனம் செய்யப்பட்டு, பச்சைக் கற்பூரம் சாற்றப்பட்டு மறுபடியும் அங்கிகள் சாற்றப்பட்டது.

இன்று மாலை நம்பெருமாளுக்கு தைலக்காப்பு அலங்காரம் சாற்றப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமஞ்சன நிகழ்ச்சியையொட்டி நம்பெருமாள் சன்னதியில் இன்றும் நாளையும் மூலஸ்தான சேவை கிடையாது. அதேநேரம் தைலக்காப்பு சாற்றப் பட்டிருப்பதால் இன்றுமுதல் 48நாள் நம்பெருமாள்(மூலவர்) திருவடிசேவை கிடையாது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்