மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு மூன்று குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதினியம் என்கிற பெயரிடப்பட்ட அந்த சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது. அந்த சட்டங்கள் தடா, பொடா ,உஃபா சட்டங்களின் கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது, மக்களாட்சி மாண்பையும், மனித உரிமைகளையும் பறிக்கும் விதமாக உள்ளது, நீதித்துறையின் அதிகாரங்களை பறிக்கும் விதமாகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் உள்ளது.
எனவே இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பிலும் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நிறைவடைந்தது. அந்த பேரணியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் பேரணிக்கு திருச்சி எம்பி துரை வைகோ நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.