திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் குரங்கு அம்மை தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், சுகாதாரத்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்விற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகளை வெப்பத்தை அளவிடும் கருவிகள் மூலம் பரிசோதனை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை, ஆகிய நான்கு பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 58லிருந்து 64 சர்வதேச விமானங்கள் வருகிறது. இதுவரை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகளை சோதனை செய்துள்ளோம்.சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நான்கு மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குரங்கு அம்மை சிகிச்சைக்காக பிரத்தியேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் டெங்குவின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. மாதம் மாதம் மழை பெய்வதால் எட்டு மாதங்களில் டெங்குவின் பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆனால் இறப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது. இந்த ஆண்டு நான்கு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.வரும் காலங்களில் மழை காலம் என்பதால் பெங்குவின் பாதிப்பு அதிகரிக்க கூடும் எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட 11 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.சுகாதாரத் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர்(Lab Technician) உள்ளிட்ட காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கருக்கலைப்பு மாத்திரைகள் பெட்டிக்கடைகளில் விற்பதற்கு வாய்ப்பில்லை. தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு ஒரு சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டதையடுத்து சைனீஸ் நூடுல்ஸ் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த சிறுமி ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி இருந்தாலும் கடையில் ஆய்வு செய்யப்பட்டு அங்கு காலாவதியான 800 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *