இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா நடைபெறுவது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் ஷர்மா பதிவாளர் சீதாராமன் ஒருங்கிணைப்பாளர்கள் சிந்து, காமாட்சி ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திருச்சி சேதுராபட்டியில் இயங்கி வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம் இயக்குனர் பேராசிரியர் கமல் கிஷோர் பந்த் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் அறிவியல் மற்றும் மனிதநேய துறையை சேர்ந்த ஒரு மாணவி இயற்பியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற உள்ளார் மேலும் இந்நிறுவனத்தில் இளநிலை கல்வி பயின்ற 35 கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, 34 மின்னணு மற்றும் தொலை தொடர்பு பொறியியல் துறை மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது. விழாவில் ஆளுநர்கள் குழுவின் மற்ற உறுப்பினர்களும் நிர்வாக குழு மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களும் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.